November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐநாவில் முன்வைக்கப்பட்டுள்ள வரைபு நீதிக்கான தேடலை தாமதப்படுத்தும்’- தமிழ் சிவில் சமூக அமையம்

இலங்கை தொடர்பில் பிரிட்டன் உட்பட நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள வரைபு, பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படை கோரிக்கைகளைக்கூட பூர்த்தி செய்வதாக இல்லை என்று தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான உத்தேச வரைபை முன்வைத்துள்ள நாடுகளுக்கு தமிழ் சிவில் சமூக அமையம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இலங்கை விவகாரத்தை தொடர்ந்தும் ஜெனீவாவில் வைத்து, நேரத்தை வீணடிக்கும் நோக்கம் கொண்டதெனவும் தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

வரைபில் உள்ளதைப் போன்று 18 மாதங்களின் பின்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதென்பது, நீதிக்கான தேடலை மேலும் 18 மாதங்கள் கிடப்பில் போடுவதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா விவகாரத்தில் சீனா மற்றும் ரஷ்யா 14 தடவைகள் வீட்டோக்களைப் பயன்படுத்தியதைத் தாண்டியும் பிரேரணைகளை ஐநா பாதுகாப்பு சபையில் முன்வைத்த மேற்குலக நாடுகள், இலங்கை விவகாரத்தில் தயங்குவது ஏன்? என்றும் தமிழ் சிவில் சமூக அமையம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தில் அரசியல் தீர்வுக்கான ஓர் ஆரம்பப் புள்ளியேனும் இல்லை என்றும் சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உகந்த தீர்வைத் தெரிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடந்தும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநா விசேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.