மாகாணசபை தேர்தலை இந்த ஆண்டில் நடத்த முடியுமா என்பது குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு ஜூன் மாதமளவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசாங்கம் இன்னமும் உறுதியான கருத்தொன்றைத் தெரிவிக்காது உள்ளது. எனினும் உத்தியோகப்பூர்வமற்ற பேச்சுக்கள் அரசாங்கத்திற்குள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் தேர்தலை ஜூன் மாதத்தில் நடத்த முடியுமா, அதற்கான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏதேனும் சிரமங்கள் உள்ளதா என்பது குறித்து ஆராயும் விதமாகவே நாளைய தினம் பிற்பகல் ஜனாதிபதியுடன் சுகாதார தரப்பினர் கலந்துரையாடவுள்ளனர்.
அதேபோல் நாட்டின் சகல மாகாணசபைகளும் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்தையும் ஒன்றாக நடத்த முடியுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அமைச்சர்கள், செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.