July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரம் ரூபா: கம்பனிகளின் எதிர்ப்பையும் மீறி சம்பள நிர்ணய சபை தீர்மானம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபா அடிப்படை மற்றும் 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அடங்கலாக ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபையினால் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தொழில் அமைச்சு அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற சம்பள நிர்ணய சபைக்கும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் தீர்மானத்திற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் இணக்கம் வெளியிடவில்லை.

ஆனபோதும் தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள சம்பள நிர்ணய சபை குறித்த சம்பளத்தை வழங்குவதற்கு இறுதித் தீர்மானத்தை எடுப்பதாகவும், இது தொடர்பாக அரசாங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையின் போது ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க முடியாது என்பதற்காக பெருந்தோட்டக் கம்பனிகள் 18 காரணங்களை முன்வைத்துள்ளன.

அந்தக் காரணங்களுக்கு இணங்க முடியாது என்று தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள் தமது நிலைப்பாட்டில் இருந்து வில முடியாது என்று அறிவித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள தொழில் ஆணையாளர் 900 ரூபா அடிப்படை சம்பளத்துடன் ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என்பதே இறுதித் தீர்மானம் எனவும் இது தொடர்பான வர்த்தமானியை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.