
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் இறுதி அறிக்கையின் பிரதி இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டப்பிரிவின் பணிப்பாளர் ஹரிகுப்தா ரோஹணதீர இன்று பேராயர் மெல்கமைச் சந்தித்து, அறிக்கையைக் கையளித்துள்ளார்.
இதேநேரம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் இறுதி அறிக்கை மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையின் பிரதி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு மதத் தலைவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.