அரசாங்கத்திலிருந்து விலகுமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக சூரியவெவ பகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவானது தாக்குதலை நடத்தியவர்கள், அதற்கு உதவியவர்கள் தொடர்பாக தேடிப் பார்க்காது சம்பந்தமில்லாதவர்கள் மீதே குற்றச்சாட்டுகளையே அறிக்கையில் முன்வைத்துள்ளதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லையென்றே தமது கட்சி எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசியல் நிலைமையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இது நாங்கள் அமைத்த அரசாங்கம் என்பதனால் குறைபாடுகள் இருக்குமாயின் அதனை சீர்செய்துகொண்டு பயணிக்க எதிர்பார்க்கின்றோம் என்று மகிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.