திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கையின் வசமாக்கும் நோக்கோடு இந்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதுபற்றி அறிவித்துள்ள அமைச்சர் கம்மன்பில,
“இந்தியாவின் கட்டுபாட்டின் கீழ் இயங்கி வருகின்ற திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது.
அதற்கான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். எனவே இப்போது இந்திய மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது.
இந்தியா இந்த விடயத்தில் ஆரோக்கியமான விதத்தில் நகர்கின்றது. இது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்த இந்திய மத்திய அரசும் தயாராகவே உள்ளது.
இந்தியத் தூதரகம் மூலமாக இதனை அறிவித்துள்ளனர். எனவே விரைவில் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்”- என்றார் அமைச்சர் உதய கம்மன்பில.
1987 இந்திய- இலங்கை ஒப்பந்தம்
திருகோணமலை எண்ணெய்க் குதக் கட்டமைப்பு 2003ஆம் ஆண்டில் 35 வருட குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டில் கைச்சாத்தான இந்திய- இலங்கை அமைதி ஒப்பந்தப்படி, திருகோணமலை எண்ணெய்க் குதக் கட்டமைப்பை வேறு நாடுகளுக்கு கையளிப்பது தடுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவும் இலங்கையும் கூட்டாகவே அதனை இயக்க வேண்டும் என்ற ஏற்பாடு அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
1930களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட 101 எண்ணெய்த் தாங்கிகளில் 2 தாங்கிகள் இரண்டாம் உலகப்போரில் அழிவடைந்து விட்டன.
அன்று முதல் பாவனையில் இல்லாமல் இருந்த மிகுதி 99 தாங்கிகளையும் மீண்டும் பாவனைக்கு உகந்தவையாக மாற்றி இயக்கும் முயற்சியாகவே, 2003ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அவற்றை இந்தியாவுக்கு வழங்கியது.
எனினும் இலங்கையில் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அந்த குத்தகை ஒப்பந்தம் முழுமையாக அமுலாவதில் இடையிடையே தடங்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.