இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கம் முன்நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சர்வதேச நாடுகள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிவில் அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து வாசிக்கப்பட்டுள்ளது.
46 ஆவது ஐநா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, வட மசடோனியா, மலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குழு இலங்கை மீது முன்வைத்துள்ள முதலாவது வரைபு தீர்மானத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும், இலங்கை இராணுவத்தினரால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களுக்கும் நீதி வழங்கக் கோரி, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு, போர்க் குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.