இலங்கையின் இளைஞர் பாராளுமன்றம் நாட்டின் அனைத்து இன- மொழி மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 5 ஆவது இளைஞர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் கலாச்சாரம் மற்றும் அரசியல்வாதிகளின் நடத்தைகள் தொடர்பாக பொது மக்களிடையேயும், இளைஞர்களிடமும் விமர்சனங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட முன்னர், நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட மாற்றங்களை செயலுருப்படுத்துவதில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்காலத்துக்கான சிறந்த அரசியல்வாதிகளை உருவாக்கும் பொறுப்பும் இளைஞர் பாராளுமன்றத்துக்கு உரியதாகவும் என்று அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன, இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் ஸ்தாபகர், அமைச்சர் டலஸ் அலகப்பெரும உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.