January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ் புதிய நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திலிருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபையினர் மறுப்பு!

யாழ்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை முதல் தனியார் துறையினர் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஓட்டுநர்கள் அதனை புறக்கணித்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் நிலையத்திற்கு யாழ்ப்பாண பொலிஸாருடன்  மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சென்றிருந்தார்.

இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களுக்கு குறித்த விடயத்தினை தெளிவுபடுத்திய அவர், இன்றிலிருந்து நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கான சேவைகள் இடம்பெறும் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, தமது உயர் மட்டத்திலிருந்து தமக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரி அல்லது சாலை முகாமையாளருடன் தொடர்பு கொண்டு  தெரியப்படுத்துமாறு  சாரதிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்த யாழ் மாநகர முதல்வர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இது தொடர்பில் இடம்பெற்ற கூட்டங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை எனவும், தொடர்பு கொண்ட போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்றிலிருந்து நெடுந்தூர பஸ் நிலையத்தை தவிர்த்து சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ் ஓட்டுநர்களுக்கும் எதிராக சட்ட வடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் தாம் பஸ் சேவையை நிறுத்தி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்த போதிலும் தற்போது சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.