இலங்கை தொடர்பாக பிரிட்டன், கனடா மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட 6 நாடுகளினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை இன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
இந்த பிரேரணையின் பிரதி ஏற்கனவே இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்பட்ட பின்னர், இலங்கை இது தொடர்பாக பதிளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இம்மாதம் 19 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐநாவில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகளுக்கே வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும். இதன்படி பிரேரணையை தோற்கடிக்க வேண்டுமாயின் இலங்கை குறைந்தது 24 வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வகையில், நாடுகளுடன் இராஜதந்திர ரீதியில் பேசி வருவதாக வெளிவிவாகர அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.