July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரேரணையை நிறைவேற்றினாலும் எங்களை எதுவும் செய்ய முடியாது’

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன? அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவேமாட்டோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. இலங்கை தொடர்பான புதிய பிரேரணை விவகாரமும் சூடுபிடித்துள்ளது.வாக்குரிமையுள்ள 10 நாடுகள் மட்டும் இதுவரை இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இம்முறை பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எமது நட்பு நாடுகள் உறுதியாக உள்ளன. இறுதியில் என்ன நடந்தாலும் எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவே மாட்டோம். எமது புதிய அரசு பதவியேற்ற கையுடன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கை விளக்க உரையில் அரசின் நிலைப்பாடுகளை தெளிவாக வெளியுலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரும் தற்போது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்தியம்பியுள்ளார். எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மிரட்டல்களுக்கும், அவருக்கு ஆதரவாக இருக்கும் சில நாடுகளின் கூட்டிணைவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கும் நாம் அஞ்சவும் மாட்டோம்; அடிபணியவும் மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.