இலங்கையில் முதன்முறையாக மூன்று நாள் விமான கண்காட்சி ஒன்றை நடத்த இலங்கையின் விமானப்படை திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை தனது 70 வது ஆண்டு நிறைவை மார்ச் 02 ஆம் திகதி கொண்டாடுகிறது.
இதனை மையப்படுத்தியும் இலங்கை விமானப்படையின் 5 வது போர் படை மற்றும் எண் 6 ஹெலிகாப்டர் படைகளுக்கு ஜனாதிபதி புதிய நிறங்களை வழங்கியுள்ள வரலாற்று நிகழ்வை முன்னிறுத்தியும் இவ் விமான கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டள்ளது.
மார்ச் மாதம் 3-5 ஆம் திகதி வரை கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் நிகழ்வில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையின் மொத்தமாக 23 விமானங்கள் பங்கேற்கவுள்ளன.
இலங்கையின் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஸன பத்திரனவின் அழைப்பின் பேரில் இந்திய படைகள் இவ் கண்காட்சியில் பங்குபற்றுகின்றன.
இதற்காக இந்திய விமானங்கள் சி 17 குளோப் மாஸ்டர் மற்றும் சி 130 ஜே போக்குவரத்து விமானங்களின் உதவியுடன் பெப்ரவரி 27 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளன.
இந்திய இலங்கையின் ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் இரு நாடுகளின் படைவீரர்களுக்கு இடையிலான பல ஆண்டுகால நெருக்கமான நட்புறவை வெளிப்படுத்தியும் இவ் விமானங்கள் கண்காட்சியில் பங்கு கொள்கின்றன.
கண்காட்சியில் இடம்பெறும் விமானங்களில் பங்சாரங் (அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர்) ஏரோபாட்டிக் டிஸ்ப்ளேவுடன், சூர்யா கிரண் (ஹாக்ஸ்), தேஜாஸ் போர் விமானம், தேஜாஸ் பயிற்சி மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானம் என்பனவும் அடங்குவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையின் அதிகாரிகள், இந்திய கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் டோர்னியர் மற்றும் கப்பலில் முதல் அனுபவத்தை பெறுவார்கள்.