October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகிந்தவுடனான சந்திப்பு நட்பு ரீதியானது என்கிறார் ரணில்!

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் பென்தொட்டையில் வைத்து தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நட்பு ரீதியானது  என அருண நாளிதழிடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையில் மூன்றுமுறை பிரதமராக இருந்துள்ளவர் ரணில் விக்ரமசிங்க, பலமிக்க எதிர்க்கட்சியின் தலைவராக விளங்கிய அனுபவமிக்க தலைவரான இவர் இறுதியாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கான தகுதியையும் இழந்திருந்தார்.

இந்நிலையில், அண்மையில் இலங்கையில் எதிர்க்கட்சியை வழிநடத்த மிகவும் பொருத்தமான நபர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனும் கருத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்திருந்தார்.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த பிரதமர், பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியில் இருப்பது அரசாங்கத்திற்குப் பாதகமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக நோக்கும் போது அவரே அந்த இடத்திற்குப் பொருத்தமானவர் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே, ரணில் மகிந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இவ் சந்திப்பு குறித்த மேலும் கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, மற்றவர்கள் போன்று தம்மால் பாராளுமன்றத்தில் பிரதமரை சந்திக்க முடியாது என்பதால் இருவரும் சில காலமாகவே குறித்த சந்திப்பு தொடர்பில் விவாதித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பிரதமர் நிதி அமைச்சர் பதவியையும் வகிப்பதால் அவருடன் நாட்டின் பொருளாதாரம் குறித்தும் பேசியதாக அருண நாளிதழிடம் கூறியுள்ளார்.