November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிலை இழப்போருக்கான நஷ்டஈட்டை 25 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டது

இலங்கையில் தனியார் மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் அநியாயமாக தொழிலை இழக்கும் போது வழங்கப்படும் ஆகக் கூடிய நஷ்டஈட்டுத் தொகையை 25 இலட்சம் ரூபா வரையில் அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் மூடப்படுவதால் ஊழியர்கள் தொழிலை இழக்கும் போதும், நியாயமற்ற வகையில் தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும் போதும் அவர்களுக்கு வழங்கப்படும் ஆகக் கூடிய நஷ்டஈட்டுத் தொகையையே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1971 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க ஊழியர்களின் தொழிலை முடிவுக்கு கொண்டுவரும் விசேட ஏற்பாடுகளுக்கமைய 2005 மார்ச் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட ஆகக் கூடிய நஷ்ட ஈட்டு சூத்திரத்தின் கீழ் இதுவரையில் வழங்கப்பட்ட 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நஷ்ட ஈட்டுத் தொகை 25 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்ககப்பட்டுள்ளது.

இவ்வாறாக நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஜனவரி மாதத்தில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால்  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.