November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது’ -சஜித் குற்றச்சாட்டு

(FilePhoto)

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா? என்ற சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆணைக்குழு அறிக்கை முற்றுமுழுதாக அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தற்போதைய அரசாங்கம் எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இருந்து இயங்கியவர்களை தண்டிப்பதாகக் கூறினார்கள்.

ஆனால் இந்த தாக்குதலுடன் நேரடியான தொடர்புகளை கொண்டுள்ளவர்கள், யார் காரணம் என்ற அனைத்து உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் குற்றவாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்புகள் இருக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுகின்றது.

இந்த நாட்டில் இன்னமும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உத்தியோகபூர்வமாக கூடுவதில்லை. எனவே நாம் ஆட்சிக்கு வந்ததும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சட்டபூர்வமாக அங்கீகரித்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

அத்தோடு ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பதையும், அதற்கு இடமளித்த அரசியல் தலைமைகள் யார் என்பதையும் கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனையை பெற்றுக்கொடுப்போம் என வாக்குறுதியளிக்கிறேன் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.