கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக சூனியப்பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது.
அத்தோடு நல்லடக்க வழிமுறைகள் உள்ளடங்கிய வழிகாட்டி அறிக்கையை இந்த வாரம் இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் சர்வதேச மற்றும் தேசிய அழுத்தங்கள் காரணமாக தற்போது உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் நல்லடக்கம் செய்ய முன்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பொது இடங்களில் அல்லது பொது மயானங்களில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க முடியுமா என்பது குறித்தும் கொவிட் -19 செயலணிக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மக்கள் நடமாட்டம் இல்லாத, வேறெந்த தேவைகளுக்ககாவும் பயன்படுத்தாத சூனியப்பிரதேசமான தீவு ஏதேனும் ஒன்றை தெரிவுசெய்து அங்கு உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கும் விதமாகவே கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் எந்த தீவை தெரிவு செய்வது என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவில்லை என தெரிவிக்கும் சுகாதார பணியகம், இவ்வாறு தெரிவு செய்யப்படும் தீவு நீர் மட்டத்தை விடவும் உயர்வாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உடல்களை நல்லடக்கம் செய்ய முன்னர் நிலத்தை தொற்றுநீக்கம் செய்ய வேண்டியதும் கட்டாயமானதாகும் என்ற காரணிகளையும் சுகாதார பணியகம் முன்வைத்துள்ளது.