January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜெனிவா ஊடாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று இலங்கை மக்கள் எண்ணும் நிலைமை உருவாகியுள்ளது”

ஜெனிவா ஊடாகவே நாட்டில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமென்று இலங்கை மக்கள் எண்ணும் நிலைமையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதும், அரச நிறுவனங்கள் மீதும் நம்பிக்கை இல்லாது போயுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனை ஆகிய விடயங்களில் ஜெனிவா மூலமே தீர்வு கிடைக்குமென்று மக்கள் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பான தீர்மானம் நாட்டின் அரசியலமைப்புக்கு அமையவே எடுக்கப்பட வேண்டுமே ஒழிய ஜெனிவாவின் அழுத்தங்களால் எடுக்கப்படும் தீர்மானங்களாக இருக்கக் கூடாது என்றே தாம் எதிர்பார்ப்பதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் ஊடாக நாட்டின் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை நீக்குமாறு பரிந்துரைகளை வழங்கும் நிலைமையில் இங்கு நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது என்று வெளிவிவகார அமைச்சரினால் ஜெனிவாவுக்கு கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக வெளிவிவகார இராஜாங்க அமைச்சரின் தந்தை பதவி வகிக்கும் நிலையில், அந்த ஆணைக்குழுவும் சுயாதீனமானது என்றும் அவரால் கூற முடியாது என்றும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.