
அவுஸ்திரேலியாவில் பஸ் சாரதிகளாக தமது தொழிலை முன்னெடுத்துள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மூவர் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளனர். இவர்கள் தொடர்பான செய்தியை உள்நாட்டு இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான, சுராஜ் ரந்திவ், சிந்தக ஜயசிங்க மற்றும் சிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான வெடிங்டன் வாயெங்கா ஆகியோரே அவ்வாறு அவுஸ்திரேலியாவில் பஸ் சாரதிகளாக தமது தொழிலை முன்னெடுத்துள்ளனர்.
மெல்பேர்னில் உள்ள 1200க்கும் மேற்பட்டவர்கள் சாரதிகள் பணியாற்றும் பிரான்ஸை தளமாக கொண்ட டிரான்ஸ்டெவ் என்ற நிறுவனத்தில் இவர்கள் பஸ் சாரதிகளாக பணிபுரிகின்றனர்.
இவர்கள் பேருந்து சாரதிகளாக தொழில் புரிந்த போதிலும் கிரிக்கெட் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
சுராஜ் ரந்திவ் தனது சாரதி தொழிலுக்கு அப்பால் உள்ளூர் கழகமொன்றின் கிரிக்கெட் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
மெல்பேர்னில், சமீபத்தில் நடை பெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதாகவும் ரந்திவ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தமக்கு அளித்த சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பவில்லை எனவும் ரந்திவ் கூறியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்திவ், 2009 டிசம்பரில், இந்தியாவில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கையின் ஒருநாள் அணியில் முத்தையா முரளிதரனுக்குப் பதிலாக அறிமுகமானார்.
ஐந்து டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் தேசிய அணிக்காக 49 ரன்கள் எடுத்துள்ளார்.
2011 கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றிறுந்தார்.
இதேவேளை முன்னாள் வீரர் சிந்தக ஜயசிங்க, இலங்கை அணியில் இருபது 20. சர்வதேச துடுப்பாட்ட கிண்ண போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அத்தோடு 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணியில், ஒரு தனி டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வெடிங்டன் வாயெங்காவும் நடுத்தர வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார்.