(Photo:@Vishnu06Jaffna/Twitter)
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு கிராமத்தில் தனது சொந்தக் காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் தடைவிதித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
போர்ச் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செய்து, விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள குமுளமுனை தண்ணிமுறிப்புக்குள வீதிக்கு அருகாமையில் பேரானந்தம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் காணியில் சுத்தம் செய்வதற்காக டோசர் இயந்திரம் மூலம் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பௌத்த தேரர் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ‘இந்தக் காணி தொல்லியல் புராதன பூமி, இங்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினர் மற்றும் வன திணைக்களத்தினர் காணி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் காணியை துப்பரவு செய்ய முடியாது எனவும் தடை விதித்துள்ளனர்.
தண்ணிமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த பிரதேசமானது தமிழ் மக்கள் பல ஆண்டு காலமாக குடியிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட பகுதியாகும்.
தற்போது இந்தப்பகுதியில் தமது காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதேவேளை அண்மையில் குருந்தூர் மலையில் இராணுவம், தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அதனை அண்டிய தமிழர்களுக்கு சொந்தமான குடியிருப்புகள், விவசாய நிலங்கள் என்பனவற்றை அபகரிக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.