தோஷம் கழிப்பதாக கூறி மாந்திரீகர் ஒருவரால் நடத்தப்பட்ட பிரம்பு தாக்குதலுக்கு இலக்கான 9 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் மீஹவத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது பிள்ளையை தீய தோஷம் தொற்றியுள்ளதாக தெரிவித்து பெற்றோர் தமது வீட்டுக்கு அருகில் உள்ள பெண் மாந்திரீகர் ஒருவரிடம் அந்த சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது தோஷத்தை நீக்குவதாக கூறி சிறுமி மீது மாந்திரீகர் பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடி தாங்க முடியாது அந்த சிறுமி கூச்சலிட்டு கத்தும் சத்தம் நீண்ட நேரம் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் சிறுமி சுயநினைவிழந்துள்ளதாகவும், இவ்வேளையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக குறித்த மாந்திரீகரை கைது செய்துள்ள மீஹவத்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் பெற்றோர் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.