January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு கோட்டாபய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்’

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் சந்திக்கவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது உண்மைச் செய்தி எனில் அதை ஜனாதிபதி அல்லது அவரின் ஊடகப் பிரிவுதான் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு கோட்டாபய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரில் சந்திக்கவுள்ளார் எனின், அது தொடர்பில் ஜனாதிபதி அல்லது அவரின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து இந்தச் சந்திப்பு தொடர்பில் வேறு அதிகாரிகள் கருத்துத் தெரிவித்திருந்தால் அது தொடர்பில் எம்மால் பதிலளிக்க முடியாது.

தற்போது ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இதையொட்டி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதிக்கான போராட்டங்களும் உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலும் வலுப்பெற்றுள்ளன.இந்தநிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி விரைவில் சந்திக்கவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு இலங்கை அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை அரசு நழுவ முடியாது. இந்தக் கடமையிலிருந்து இலங்கை தப்ப சர்வதேசமும் ஒருபோதும் இடமளியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.