January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவாவில் இந்தியா இலங்கையை கைவிடவே கூடாது’ – கொலம்பகே வேண்டுகோள்!

Photo : mfa.gov.lk

ஜெனிவா நெருக்கடியில் எமது அயல் நாடான இந்தியா, நடுநிலைமையை பேணாமல், முழு ஈடுபாட்டுடனும், ஆக்கப்பூர்வமாக இலங்கைக்கு ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என இலங்கையின் வெளி விவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இலங்கை விடயம் விரைவில் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் வாக்கெடுப்புக்கு வர இருக்கின்றது. இதன் போது இந்தியா இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் “இந்தியா எங்களை கைவிட முடியாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அண்மையில் உரையாற்றிய இந்திய வெளி விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், முழு உலகத்தையும் ஒரு குடும்பகம் என்று கூறியதை சுட்டிக்காட்டிய கொலம்பகே, முழு உலகமும் ஒரு குடும்பம் என்றால், நாங்கள் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான குடும்பம், என தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகளான  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய இலங்கையின் அயல் தேசங்கள்,  கொரோனா நெருக்கடி, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்று அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் ஒரே மாதிரியானவை என கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜெனிவாவில் பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டு நின்று இலங்கையை ஆதரிக்கும் என எதிர்பார்பதாகவும் அவ்வாறு இல்லாவிட்டால் இது இலங்கைக்கு பெரும் அசெளகரியகத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கோரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முதல் கடிதம் இந்தியப் பிரதமருக்குத்தான் அனுப்பப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தென்னாசியாவின் ஐக்கியம் குறித்து நாங்கள் அதிக சிரத்தை கொண்டிருப்பதாகும் என வெளி விவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் விசேடமாக எதையும் கோரவில்லை என கூறியுள்ள அவர் இந்தப் பிராந்தியத்தின் நாடுகளினுடையே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒரு முகமாக இருக்க வேண்டும் என்ற அயலுறவுக் கொள்கையின் அடிப்படையிலான பங்களிப்பையே உரிமையுடன் எதிர்பார்த்திருப்பதாக ஜெயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராகக் காட்டமான பிரேரணை ஒன்றைத் தோற்கடிப்பது சாத்தியமற்றது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

‘இத்தகைய தீர்மானம் ஒன்றின் பின்னர் வரக்கூடிய பொருளாதாரத் தடை போன்ற தண்டிப்பு நடவடிக்கைகள் நாட்டை விட மக்களையே அதிகம் நெருக்கடியில் ஆழ்த்தும்’ என்று குறிப்பிட்ட அவர், நல்லிணக்கம் நாட்டுக்குள், நாட்டு மக்களிடையே இருந்து ஏற்பட வேண்டுமே தவிர, வெளியிலிருந்து அதனைத் திணிக்க முடியாது என சாரப்படவும் கருத்து வெளியிட்டுள்ளார்.