
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய விவசாய ஏற்றுமதி வலயங்களை அமைப்பதற்கான தேசிய செயற்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை கஸபகல ரஜமஹா விகாரையில் அதன் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
அங்கு மாங்கன்று ஒன்றை நாட்டி வைத்து பிரதமர் அந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதேவேளை அந்தப் பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து நாடு பூராகவும் விவசாய ஏற்றுமதி வலயங்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இச்செயற்திட்டத்துக்கு இணையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு இலட்சம் மரமுந்திரகை கன்றுகளை நட்டு வைக்க இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி விவசாய உற்பத்தி 2 சதவீதமாக காணப்படுகிறது. இவ்வளர்ச்சி வீதத்தை 2025 ஆம் ஆண்டு 4 சதவீதமாக அதிகரித்து விவசாய முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒன்பது மாகாணங்களிலும் காலநிலை மற்றும் பௌதிக காரணிகளுக்கு அமைய பொருத்தமான ஏற்றுமதியை இலக்காக கொண்டு மரமுந்திரிகை, மிளகு, கறுவா கராம்பு, வெற்றிலை ஆகிய சிறுபயிர் செய்கையினை ஊக்குவிக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.