வடபகுதியில் உள்ள சுயதொழில் மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் பிரதேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றிச் செல்வதே தமது நோக்கம் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறப்பதற்கு தாம் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் அவற்றை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
யாழ்ப்பாணப்பத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால், யாழில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்பந்தமாக மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றார்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது பனை, புகையிலை அபிவிருத்தி தொடர்பிலும் அவற்றை எவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் விவசாயம் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்ந்ததாக அவர் கூறினார்.
அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றார்.
விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததாகவும் இந்த இரண்டு துறைகள் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மேன்மேலும் அதிகரித்துச் செல்ல முடியும் எனவும் அவர் கூறினார்.
தொழில் முயற்சியாளர்களின் தொழில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் வியாபார வலையமைப்பும் நுண் கடன் பிரச்சினைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன என தெரிவித்த அவர் நுண் கடன் பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது போயிருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாவாக வீழ்ச்சி கண்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு நடந்திருந்தால் நாட்டில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.