January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் பெற்றுக்கொடுப்பது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்” : சம்பந்தன்

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை  வழங்கும் விதத்திலும் புதிய பிரேரணை அமையப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பற்றி ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை அரசு பொறுப்புக்கூறும் வகையில் பிரேரணையை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு. ஜெனிவா அமர்வில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை தொடர்பான ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்ததுடன், உறுப்பு நாடுகளும் அதனை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கை மீது பிரிட்டன் முன்வைக்கவுள்ள பிரேரணையின் நகல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

அது காத்திரமானதாக இல்லை என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போர் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்டன. எனவே நீதிக்காகவும், தீர்வுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது ஐநா மனித உரிமை சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பிரதான கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரிட்டன் சில நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது முன்வைக்கவுள்ள பிரேரணையை வலுவாக்கி  சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு அனைத்து உறுப்புரிமை நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்’ எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.