இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டத்தின் மூலம் மக்கள் வெளிப்படுத்திய ஏகோபித்த வேண்டுகோளை அரசும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் ஏற்கவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பெரும் அடக்குமுறைக்கு தமிழ் மக்கள் உள்ளாகி விடும் ஆபத்து நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் ஹர்த்தால் போராட்டத்தின் முடிவில் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அவரது அறிக்கையின் சாராம்சம்:
“இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது…பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும் போரிலும் தம் உயிர் நீத்துள்ளனர். இன்னும் நாம் விடுதலை பெறவில்லை…
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்தும் ஈமக்கடனியற்றியும் கண்ணீர்விட்டழுதும் ஆறுதல் பெறுவது தமிழ் மக்களின் பாரம்பரியம்..
வடக்கு கிழக்கு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் தடையுத்தரவின் பேரில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு வருகின்றனர்.
அரசின், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அடிப்படை உரிமைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் மனிதாபிமான கடமைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஐநா சாசன உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும்.
“இராணுவ மயமான ஆட்சி”
இந்நிலைமைகள் தான் 1987 செப்டெம்பரில் காந்திய வழியில் உண்ணா நோன்பிருந்து 26ஆம் திகதி உயிரிழந்த திலீபனை நினைவுகூர்வதிலும் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இப்பொழுது 20ஆவது திருத்தச் சட்டவரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றும் தீவிரத்தில் உள்ளார்.
19ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கும்போது, ஓரளவுக்கிருந்த நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படும்.
சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சியும் ஏற்படும்.
தமிழ்த் தேசத்து மக்களின் அரசியல் ஆளும் உரிமைகள், ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள், மனிதாபிமானக் கடமைகளை இத்தகைய அரசொன்றின் எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்கமுடியாது.
பெரும் அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் தமிழ்த் தேச மக்கள் மூச்சு விடவோ கண்ணீர் விடுவதற்கோ கூட உரிமையற்றவர்களாகி விடுவோம்.
தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழினம் அழிந்து விடும் அபாயத்தையே எடுத்துச் சொல்கிறோம்.
இந்த அபாயத்தை எதிர்கொண்டதால் தமிழ்த் தேசியத்தைக் கொண்டியங்கும் 10 அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் கடந்த 18ஆம் திகதியன்று ஒன்று கூடி இழந்து போகும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் படி ஒரு வேண்டுகோளில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பினோம். இதுவரை பதிலில்லை.
அரசின் பொலிஸார் வடக்குக் கிழக்கு முழுவதும் பல நீதிமன்றத் தடைகளையும், நடவடிக்கைகளையும் எடுத்த போது அவற்றைத் தாண்டி கடந்த 26ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை எங்கே நடத்துவது என்பதைத் தீர்மானித்தோம்.
நேற்று முன்தினம் சாவகச்சேரியில் கைது செய்யப்படுவோம் என்ற நிலையிலும் முழுநாளும் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தினோம்.
அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகள் மற்றும் இறந்தோரை நினைவுகூரும் உரிமையை நிலை நாட்டவும் வடக்குக் கிழக்கு பிரதேசத்தில் இன்று முழுக்கடையடைப்பு ஒன்றை அறிவித்தோம்.
அது வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பெரும் வெற்றியடைந்துள்ளது. 10 தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த 19ஆம் திகதியன்று அரசிடம் எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கைகளை, இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும்.
மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.
இலங்கை ஜனநாயக சக்திகளிடமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் எங்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றோம்”
-என்று கூறியுள்ளார் மாவை சேனாதிராஜா.