இலங்கையின் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்காக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் அறிக்கையொன்றை வெளியிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை பாதுகாவளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கையின் மனித உரிமை விடயங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் கவலைகளை வெளியிட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இழப்பீடு தொடர்பாக அலுவலகங்கள் பாதுகாக்கப்பட்டு, அவற்றுக்கான வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் முனைப்புடன் செயற்படும் என்று தாம் நம்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.