October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“தமிழ்- சிங்கள மாணவர்கள் ஒன்றாகக் கற்பதன் மூலம் புரிந்துணர்வை ஏற்படுத்தலாம்”-யாழில் அஜித் நிவாட் கப்ரால்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தென்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் வடக்கிலுள்ள மாணவர்களுடன் ஒன்றாக கல்வி கற்பதன் மூலம் புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 11,000 மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்கின்றார்கள். அதில் 4,500 பேர் தென் பகுதியைச் சேர்ந்த மாணவர்களாவர்கள்.

தென்பகுதி மாணவர்களும் வடபகுதி மாணவர்களும் இங்கு கல்வி கற்பதென்பது இருதரப்பிலும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நல்லதொரு சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மக்களுடன் எனக்கு நீண்டகால தொடர்பு உண்டு, நான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களின் போது யாழ் மக்களுடன் சிறந்த தொடர்புகளை பேணி வந்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழில் விவசாய நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக இருப்பதை நான் அவதானித்தேன்.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரைக்கும் விவசாயத்துக்கான நீர் பெறுவதில் பெரும் சிக்கல் நிலை காணப்படுகின்றது.  அவ்வாறான நிலையிலும் கூட விவசாயத்தை மிகவும் சிறப்பாக மேற்கொள்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது அரசாங்கத்தின் நோக்கம் பொருளாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு சென்று முதலீடுகளை அதிகரிப்பதேயாகும்.

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முதலீட்டு செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம்.

அத்தோடு வடக்கினை பொறுத்தவரைக்கும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் இதன்போது தெரிவித்துள்ளார்.