November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: இறுதி அறிக்கையை ஆராய்வதற்கு சட்ட நிபுணர்களை நியமிக்கவுள்ளது எதிர்க்கட்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்ட நிபுணர்களின் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்துள்ளது.

தமது கட்சியின் செயற்குழு குறித்த அறிக்கையை ஆராய்வதற்கு சட்ட நிபுணர்களின் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் யாருடைய உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது என்ற விடயத்தை ஜனாதிபதி ஆணைக்குழு வெளிப்படுத்தத் தவறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வீடியோ ஒளிப்பதிவுகள் மூலம் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை இறுதி அறிக்கையில் கண்டுகொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, சட்டத்துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் விசாரணை அறிக்கையை ஆராய்வதற்கு கட்சியின் செயற்குழு தீர்மானித்ததாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க புதிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த அறிக்கை மூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.