நாட்டில் மனித உரிமை தொடர்பான விடயங்களை மேம்படுத்துவதற்கு இலங்கை, ஐநா மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமாக ஒத்துழைத்து, செயற்படுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கத்தை அனுமதிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட நாடுகளில் மனித உரிமைகளை கடைபிடிப்பது தொடர்பான ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணை, ஒருபோதும் குறைத்து மதிப்பிடப்படக்கூடாது என்றும் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாஸா விவகாரம் ஐநா ஆணையாளரின் அறிக்கை மற்றும் இலங்கை மீதான தீர்மானத்தைக் கொண்டுவரும் பிரதான நாடுகளின் அறிக்கை ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டதே, இவ்விடயத்தில் தீர்வு கிடைப்பதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க உரிமைக்குக் குரல்கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.
ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களிலும் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்றும் ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.