ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஐநாமனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டுவருகின்றது. இதில் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. சில நாடுகள் நடுநிலைப் போக்கை வெளியிட்டிருந்தன. பல நாடுகள் இலங்கையின் போக்கை விமர்சித்திருந்தன.
இந்த நிலைமை தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் வினவப்பட்டபோது:
‘ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் நிச்சயம் தோற்கடிக்கப்படும். நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. அதிலும் குறிப்பாக சக்தி மிக்க நாடுகள் தீர்மானத்தை தோற்கடிப்பதில் உறுதியாக உள்ளன.
இலங்கையைப் பழிவாங்கும் வகையில் ஒரு சில நாடுகளின் சதித் திட்டங்களுடன் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் தெட்டத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
இதனைக் கருத்தில் எடுத்துள்ள உறுப்பு நாடுகள் தீர்மானத்தை நிச்சயம் தோற்கடித்தே தீரும்”
-என்று தெரிவித்தார்.