
கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு அடுத்தவார முற்பகுதியில் வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாமை நீண்டகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் அதற்கான அனுமதி நேற்று விசேட வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.
இவ்வர்த்தமானியில் கொரோனாவால் மரணிப்பவரின் உடலை தகனம் அல்லது புதைக்க முடியும் என்பதுடன், மேலும் பல துணை உத்தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய துணை உத்தரவுகளின்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய, அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.
இதற்கமைய நேற்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் வழங்கக்கூடிய உத்தரவுகளுக்கு ஏற்ப சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, அடுத்தவார முற்பகுதியில் புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.