ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை மீதான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெகு விரைவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சின் செயலாளர் அத்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்தார்.
தீர்வினை பெற்றக்கொடுப்பதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சின் செயலாளர் ‘த இந்து’ செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திக்கவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவித்துள்ள அவர் அரசியல் தலைவர்களின் கருத்துக்களைக் காட்டிலும், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான பிரச்சினையைக் கேட்டறிந்து அவர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க விரும்புவதாகவும் ஜயனாத் கொலம்பகே கூறினார்.
வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசு விலகியிருந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், துண்டுப் பிரசுரமொன்றில் காணப்படும் காணாமல் போன நான்கு தமிழ்ச் சிறுமிகளையும் தமக்கு காட்டினால் ஜனாதிபதியுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்பதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.