October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புர்கா, மதரஸாக்களுக்கு தடை எனக் கூறிக்கொண்டு இலங்கை அரசு அடுத்த பாகத்தை ஆரம்பித்துள்ளது’

இனவாதத்தை கையிலெடுத்து ஆட்சிக்கு வந்த அரசுக்கு நேற்று வரை ஜனாஸா எரிப்பு தேவைப்பட்டது. இன்று முகம் மூடுதல் மற்றும், மதரஸாக்கள் தடைகளும் தேவைப்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது கொரோனாவால் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது என்பது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரிமையை இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கு வழங்காமல் முன்னெடுக்கப்பட்ட இனவாதம் தழுவிய நயவஞ்சக செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்த உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக பலதரப்பட்ட வழிகளிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் யார் என்ன கூறினாலும் இதற்கு அனுமதி வழங்கமாட்டேன் என இருந்த இலங்கை அரசை இந்த போராட்டங்களும் இம்ரான் கானின் வருகை உள்ளிட்ட விடயங்களுமே அனுமதி வழங்க நிர்பந்தித்திருந்தது எனவும் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்த அரசு எமக்கு புதிதாக எந்த சலுகைகளும் தரவில்லை. எமது அடிப்படை உரிமையையே பல போராட்டங்களின் பின் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் கிடைக்கப்பெற்றது.

அதுமட்டுமில்லாது 350 ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட பின்னர் தான் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இதற்கு யாரும் தனிப்பட்ட ரீதியில் உரிமைக் கோர முடியாது. முக்கியமாக 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு இதற்கான தார்மீக உரிமை கிடையாது.

இந்த அரசு இனவாதத்தை கையிலெடுத்தே ஆட்சிக்கு வந்தது ஆட்சியை கொண்டு செல்லவும் அவர்களுக்கு இனவாதமே தேவைப்படுகிறது.

இதேவேளை நேற்றுவரை ஜனாஸா எரிப்பு தேவைப்பட்டது. இன்று முகத்தை மூடுவதற்கு தடை, மதரஸாக்களுக்குத் தடை எனக் கூறிக்கொண்டு அடுத்த பாகத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

ஆகவே இவை அனைத்தையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.