
ஜெனிவா உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகளிலிருந்து விடுபடக் காலம் தாழ்த்தாது சரியான தீர்மானங்களை அரசு எடுக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டார்.
20 ஆவது திருத்தமே நாட்டின் அழிவுக்குக் காரணமெனத் தாம் நம்புவதாகவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.
ஜெனிவாவில் இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையிலேயே எதிரணியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் கரு ஜயசூரியவின் இந்தக் கருத்து வந்துள்ளது.
உலகின் பல நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பல்வேறு தடைகளைக் கொண்டுவர முயல்வதாகக் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.
இலங்கையர் என்ற ரீதியில், நாம் மேலும் இந்த பிரச்சினை குறித்து முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் தூரநோக்குடன் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
20 ஆவது திருத்தமே நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் என தாம் கருதுவதாகத் தெரிவித்த அவர் இதனால் நாட்டிற்குக் கிடைத்த நன்மை என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.
ஒருவரிடம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் வழங்குவதன் மூலம் பொருளாதாரம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வு காண முடியாது எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.
அத்தோடு 20 ஆவது திருத்தமானது அதிகார பேராசையினால் கொண்டுவரப்பட்டது, தற்போதாவது புத்தியுடன் செயற்படுமாறு அரசாங்கத்தை அறிவுறுத்தினார்.
இதனிடையே இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கையின் ஆட்சேபனைகளையும் மீறி, அமுல்படுத்துவது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.