May 3, 2025 13:39:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா தீர்மானம்: இலங்கை அரசாங்கத்தின் பரிந்துரைகள் திங்கட்கிழமை முன்வைக்கப்படும்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளுடன் தொடர்புடைய பரிந்துரைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முன்வைப்பதற்கு  இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் மற்றும் நட்பு நாடுகள் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இவ்வாறு முன்வைக்கப்படும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக பிரிட்டன், ஜேர்மன், கனடா, வட மெசிடோனியா, மொண்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து புதிய பிரேரணையை கொண்டுவந்துள்ளன.

இந்தப் பிரரேரணை தொடர்பான பரிந்துரைகளையே திங்கட்கிழமை அரசாங்கம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.

ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வியட்நாம், மாலைதீவு, கியூபா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

பிரிட்டன், நோர்வே, கனடா, அமெரிக்கா, ஜேர்மன் உள்ளிட்ட 15 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளன.

அத்துடன் இந்தியா, யப்பான் ஆகிய நாடுகள் நடுநிலையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.