January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் ஆட்சேபனைகளை மீறி மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளை அமுல்படுத்த ஐநா நடவடிக்கை

ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கையின் ஆட்சேபனைகளையும் மீறி, அமுல்படுத்துவது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் பிரதி உயர்ஸ்தானிகர் நதா அல் நாஷிப் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை முன்வைக்கப்பட்ட ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் திருத்தங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐநா ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக இலங்கை சில கவலைகளையும் மாற்றங்களையும் முன்மொழிந்ததால், இறுதி அறிக்கை மூன்று வாரங்கள் அளவில் தாமதமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான மாதிரிகளை ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆராய்ந்து வருகின்றதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயத்தில் ஏற்கனவே சிரியா, மியன்மார் அல்லது வட கொரியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பொறிமுறையா அல்லது புதிய ஒன்றா என்பதைப் பரிசீலிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் பொருத்தமான பொறிமுறையைச் செயற்படுத்துவதற்கான உரிமை ஐநா பேரவைக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கையில் போதிய ஆதாரங்கள் இல்லை என இலங்கை மறுத்துள்ள நிலையில், கடந்த பல வருடங்களாக ஐநா உயர்ஸ்தானிகர் அலுவலகம் பெரியளவான ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாகவும் நதா அல் நாஷிப் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

நன்றி: EASWARAN RUTNAM (Dailymirror.lk)