November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“காணாமல் போன நான்கு சிறுமிகளையும் காட்டினால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்குத் தயார்”

காணாமல் போன நான்கு தமிழ்ச் சிறுமிகளையும் எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதியுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

துண்டுப் பிரசுரமொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் இருக்கும் நான்கு சிறுமிகளை காண்பித்து, இவர்களை எமக்கு காட்டினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பில் பதிலளிக்கும் வகையிலே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றமடைந்துள்ளோம். கடைசியாக 2017 ஆம் ஆண்டில் கூட இலங்கை அரசாங்கத்துடன் அலரி மாளிகையில் சந்தித்தோம். அப்போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

குறித்த நான்கு பிள்ளைகளையும் ஜனாதிபதி காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம்.

அதன்மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாவதி, ஆட்சி மாற்றம் என்பது தமிழர்களுக்கு ஒரு தீர்வு அல்ல. எனவும் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இராணுவம் பொறுப்பல்ல என்றும் அவர் ஒரு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் அவரது கருத்துக்கள் வருத்தமளிக்கின்றது. எமது குழந்தைகளை இராணுவம் அழைத்துச் சென்றதுதான் உண்மை.

எனவே எமது பிள்ளைகளை அழைத்துச்சென்ற இராணுவம் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.