January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவிடமிருந்து 2.2 பில்லியன் டொலரை பெறவுள்ள இலங்கை

சீன வங்கிகளிடமிருந்து 2.2 பில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவின் மத்திய வங்கியுடன் 1.5 பில்லியன் டொலர் இடமாற்று வசதியை இறுதி செய்வதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று  இராஜாங்க அமைச்சர் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாங்கள் அதை இறுதி செய்ய முடியும் என்று கப்ரால் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய தேவைகளை பூர்த்தி செய்ய இந்த நிதி “இடையகமாக” பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

700 மில்லியன் டொலர் கடனுக்காக இலங்கை சீன அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் சீன நாணயத்தில் 200 மில்லியன் டொலர் சமமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் 2005-15 க்கு இடையில், கொழும்பு சீனாவிலிருந்து பில்லியன் கணக்கான நிதியை கடன் வாங்கியது. விலையுயர்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த கடன் பெறப்பட்டிருந்தது.

மூலோபாய ரீதியாக பார்க்கும் பொழுது இந்தியப் பெருங்கடல் நாடு சீனக் கடன் பொறிக்கு பலியாகிறது என்று மேற்கத்திய மற்றும் இந்தியா கவலை கொண்டிருந்தது.

தனது சகோதரர் கோதபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 2019 ல் மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.

இந்நிலையில்,1.4 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த முடியாது என்று கொழும்பு கூறியதையடுத்து, இலங்கை தனது ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு 2017 ஆம் ஆண்டில் ஒரு சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டது.

சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான திறனை இலங்கை தக்க வைத்துக் கொள்ளும் என்று கூறியுள்ள கப்ரால், சர்வதேச நிறுவனங்களின் கடன் தரமதிப்பீடு “தேவையற்றது” என்றும் கூறினார்.

2021 ஆம் ஆண்டுக்கான 3.7 பில்லியன் டொலர் கடன் சேவை உறுதிப்பாட்டில் இந்த ஆண்டு இலங்கை ஏற்கனவே 500 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும் கப்ரால் கூறினார்.

அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதற்காக ஆடம்பர இறக்குமதி மற்றும் பல பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்தது, இதனால் நாட்டின் கடனைத் திருப்பிச் செலுத்த போதுமான அந்நிய செலாவணி நாட்டில் இருக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.9 சதவீதமாக சுருங்கியது.எவ்வாறாயினும், பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டு 27.6 பில்லியன் டொலர் வெளியேறுவதற்கு எதிராக 32 பில்லியன் டொலர் வெளிநாட்டு வருவாயை நாடு மதிப்பிட்டுள்ளதாகவும் கப்ரால் கூறினார்.