November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வைரஸ்களை அழிக்கும்’ இலங்கையின் புதிய முகக் கவசம்: பாராளுமன்றத்தில் அறிமுகம்

(Photo:Rangana Shamil Fernando/Twitter)

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரித்துள்ள புதிய முகக் கவசம் பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதேநேரம் பயன்பாட்டில் உள்ள சகல முகக்கவசங்களையும் விட உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இந்த முகக் கவசம் மூன்று அடுக்குகளைக் கொண்டது என ஆய்வுகளை நடத்திய பேராதனை பல்கலைக்கழகத்தின் இரசாயண விஞ்ஞானம் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் காமினி ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இந்த முகக்கவசத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் தொடர்பில் குறிப்பிட்ட பேராசிரியர், முதலாவது அடுக்கில் உமிழ்நீர் போன்ற திரவங்கள் உடனடியாக நீக்கப்படும் என்றும், இரண்டாவது அடுக்கில் உள்ள விசேட இரசாயணம் வைரஸை அழிப்பதுடன், மூன்றாவது அடுக்கில் உமிழ்நீர் ஆவியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வுக் குழுவின் சார்பில் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி சமிந்த ஹேரத், ‘தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ‘KN 95’ முகக் கவசத்தைவிட இந்த முகக் கவசம் பாதுகாப்பானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் இணைந்து நடத்திய ஆய்வுக்கு அமைய இந்த முகக்கவசத்தை அணிபவர் 99 வீதம் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் முகக்கவசங்களில் 7 நாட்கள் வைரஸ் உயிர் வாழக்கூடிய சூழல் இருக்கின்றபோதும், இந்த முகக்கவசத்தில் இதனைவிடவும் குறைந்த காலத்தில் வைரஸ் அழிந்துபோவது விசேட அம்சம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய முகக்கவசம் வர்த்தக அமைச்சின் பங்களிப்புடன் தேசிய சந்தைக்கு ஏற்ற வகையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், எதிர்வரும் காலத்தில் இதனை ஏற்றுமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.