July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் மொழியை நிராகரித்தால் தான் சிறந்த தேசியவாதிகள் என சிலர் நினைக்கின்றனர்: அமைச்சர் நிமல்

(FilePhoto)

பெரும்பாலான தலைவர்கள் தாம் தேசியவாதிகள் என்ற நிலைப்பாட்டில் தமிழ் மொழி உள்ளிட்ட ஏனைய மொழிகளை நிராகரித்து செயற்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு அவர்கள் தான் மிகச்சிறந்த தேசியவாத தலைவர்கள் என நினைத்துக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டாரவுக்கான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோது அதில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது லொக்குபண்டார இந்த நாட்டின் பாகுபாடு இல்லாதவரும் சுதேசிய கொள்கைகளை ஊக்குவிக்கும் தலைவராக வாழ்ந்து காட்டினார்.

இன்று பலர் இனவாத கொள்கையில் இருந்துகொண்டு தனி சிங்கள கொள்கையில் இருந்தால் தாங்கள் வீரர்கள் என நினைத்து செயற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆங்கிலத்தை நிராகரிப்பதன் மூலமும் தமிழ் மொழி உள்ளிட்ட ஏனைய மொழிகளை நிராகரித்து செயற்படுவதால் அவர்கள் தாம் மிகச்சிறந்த தேசியவாத தலைவர்கள் என நினைத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் லொக்குபண்டார சகல மொழிகளிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்த நாட்டின் ஆயுர்வேத மருத்துவத்தை பரப்ப அவர் முக்கிய நடவடிக்கைகளை எடுத்ததுடன் அவர் சபாநாயகராக இருந்தபோது நானும் அவருடன் பல சர்வதேச கூட்டங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு போதும் இலங்கையின் கொள்கையை பிளவுபடுத்தவோ, அரசாங்கத்தை விட்டுக்கொடுக்கவோ முயற்சிக்கவில்லை எனவும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பேசிய நபர் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.