July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை மீதான ஐநாவின் அழுத்தம் தொடர வேண்டும்’: பிரிட்டன் கோரிக்கை

நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் உரையாற்றும் போது, பிரிட்டனின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய துறைகளுக்கான அமைச்சர் தாரிக் அஹ்மட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றுள்ள பிரிட்டன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

அத்தோடு, இலங்கையில் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் சிவிலியன் விடயங்களில் இராணுவமயமாக்கலும் அதிகரித்துள்ளதாகவும் தாரிக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பலவந்த ஜனாஸா எரிப்புக் கொள்கை முஸ்லிம்கள் உட்பட பல்வேறு சமூகத்தினரையும் பாதித்துள்ளதாகவும் அவரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநாவின் 30 (1 ) தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டமைக்கும், உள்ளக பொறிமுறைகளில் நீதி நிலைநாட்டப்படாது போனமைக்கும் பிரிட்டன் வருத்தம் தெரிவித்துள்ளது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டமை பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.