சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பிலேயே இலங்கையின் பொறுப்புக் கூறலும் தமிழருக்கான நீதியும் தங்கியுள்ளது என்று ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பான வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் பதிலில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லையென்றும் இது வழமையான ஒன்றே என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கையில் ஒவ்வொரு அரசாங்கத்தின் போதும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளே இடம்பெற்றதாகவும், இதில் 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்காலில் இடம்பெற்ற படுகொலைகள் இதுவரையில் எங்கும் செய்யப்படாத இனப்படுகொலையின் மிகப்பெரிய குற்றமாகும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளளது.
இதன்படி சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்திடம் இலங்கையை பாரப்படுத்தவேண்டும் என்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஐநா மனித உரிமைகள் பேரவை, புதிய திருத்தப்பட்ட தீர்மானத்தை முன்வைக்கவேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச சமூகத்தின் செயற்பாட்டிலேயே இலங்கையின் பொறுப்புக்கூறலும் தமிழர்களுக்கான நீதியும் தங்கியுள்ளது என்று கூறியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், மனித உரிமைகள் பேரவையின் நம்பகதன்மையையும் நேர்மையையும் உறுதி செய்வதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.