‘தனுரொக்’ மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உட்பட நால்வரை வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஓட்டுமடத்தைச் சேர்ந்த சுமன் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதி – பெருமாள் கோவிலடியில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மானிப்பாயைச் சேர்ந்த ‘தனுரொக்’ மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டுக்கள் உள்ள ‘தனுரொக்’ மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்தவர்களால் வாளால் வெட்டப்பட்டார்.
படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்குவிலைச் சேர்ந்த மோகன் அசோக் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.மேலும் மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
காரின் உரிமையாளரை அழைத்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார் அவரை விடுவித்துள்ளனர்.
மோகன் அசோக் மீது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
மோகன் அசோக் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்தில் குற்றக் கும்பல்களுடன் தொடர்புள்ளவர்கள் என ‘தனுரொக்’, மோகன் அசோக் ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ஆனால் அவர்கள் 2018ஆம் ஆண்டுக்குப் பின் வன்முறைகளைக் கைவிட்டிருந்ததாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி தமிழ் அவனியின் யாழ். செய்தியாளர் கூறினார்.