இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள மீளாய்வு அறிக்கையை வரவேற்றுள்ள கனடா, ‘இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலை’ குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளது.
சுதந்திரமான நீதித்துறை, சிவில் சமூகம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகளுக்கான மதிப்பு, ஐனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன இலங்கையில் நலிவடைந்து வருவதாகவும் கனடா தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் மீதான பலவந்த ஜனாஸா எரிப்பு, தமிழர்களின் நினைவேந்தல்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்றன இலங்கையில் மேலும் பிளவுகளையே அதிகப்படுத்தியுள்ளதாகவும் கனடா சுட்டிக்காட்டியுள்ளது.
பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதற்காக இலங்கை ஐநா மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கனேடிய வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் ரொபெர்ட் ஒலிபன்ட் தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் உள்ளக பொறுப்புக்கூறல்- நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் தோல்வியடைந்துள்ளன… ஐநா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு நடவடிக்கைக்கான அழைப்பை இலங்கை ஏற்று நடக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அலுவலகம் தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் ஆதாரங்களை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் கனடா வலியுறுத்தியுள்ளது.