இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பிரிட்டன் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் பொறுப்பு மையத்தின் உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரிட்டன் அரசாங்கம் இலங்கை மீது மனித உரிமைகள் மற்றும் பொருளாதார தடைகளை விதிக்க முயற்சித்து வருகின்றதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் பௌத்த தேரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் பிரிட்டன் தேவையற்ற விதத்தில் செல்வாக்குச் செலுத்த முயற்சிக்கின்றதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் யுத்தத்தில் காணாமல் போன, உயிரிழந்த இராணுவத்தினரின் உறவினர்கள் சிலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.