பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்காவை தடை செய்யவும் மற்றும் முஸ்லிம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் அந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே நீதி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
குறிப்பாக முஸ்லிம் சட்டத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடிய ஆகக் குறைந்த வயது எல்லையை 18 ஆக குறிப்பிட நடவடிக்கையெடுக்கப்படும் என்பதுடன், பதிவுத் திருமணத்தின் போது பெண்களுக்கும் கையெழுத்திடும் உரிமை வழங்கப்படவுள்ளது.
அதேபோன்று ஆண்களை போன்று பெண்களுக்கும் சம உரிமையை வழங்கவும் நடவடிக்கையெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பாதுகாப்புக் கருதி பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணியக் கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பௌத்த விகாரைகள் சட்டத்தில் எந்த திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை எனவும், இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு எதிராகவும், அவர்களின் பாரம்பரிய உரிமைகளுக்கு எதிராகவும் சட்டங்களை கொண்டு வருவது இலகுவான காரியமல்ல என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.