புதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிற்கு முன் வைக்கப்படும் தமிழர்கள் தொடர்பான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள கோரிக்கைகளையும் முன் வைப்பதன் ஊடாக தமிழ் மக்கள் நன்மை அடைவார்கள் என்று முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கடந்த கால அரசாங்கங்கள் மாறிமாறி பல தீர்வுத் திட்டத்தை முன் வைத்தாலும் புதிய அரசின் உத்தேச வரைபை தயாரிப்பதற்கான நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தீர்வுத்திட்டம் தொடர்பாக கட்சிகளிடம் ஆலோசனைகளை பெற்று வருகின்றது.
தமிழ் மக்களின் உரிமைகள், அபிலாசைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் பல விடயங்களை தமிழ்க் கட்சிகள் முன் வைத்து வருகின்றன.
இந்த தருணத்தில் நிரந்தர தீர்வுத் திட்டம் தொடர்பாக தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைப்பது சிறந்ததாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்தத் திட்டம் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு 30 வருடங்களாக மாகாணசபை முறைமையின் கீழ் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இலகுவாக அமுல்படுத்த முடியும். மத்திய அரசாங்கம் இதிலுள்ள பல விடயங்களை மீளப் பெற்றுக் கொண்டாலும், இணக்கப்பாட்டுடனும், சட்டரீதியாகவும் அமுல்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையான கட்சிகள் இத்திட்டத்திலுள்ள நல்ல விடயங்களையும், குறைபாடுகளையும் முன் வைப்பது ஆரோக்கியமான விடயமே. பல கட்சிகள் முன்வைப்பதென்பது தற்காலிகமாக கையிலுள்ள விடயங்களை செயற்படுத்துவதற்கு சிறந்த வழியாகும்.
எனவே தமிழ்த் தலைமைகள் எந்தளவிற்கு தேசியரீதியாக தமிழர்கள் தொடர்பான விடயங்களை வலுவாக முன் வைப்பதைப் போல் 13 ஆவது திருத்தச்சட்ட விடயங்களையும் முன் வைப்பது ஆரோக்கியமானதே.
இத்திட்டத்தை முன் வைக்கும் பட்சத்தில் இந்திய அரசின் வலுவான ஆதரவைப் பெற முடியும் எனவும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.