
ஐநா மனித உரிமைகள் பேரவையில் தமது நிலைப்பாட்டை ஆதரிக்குமாறு இலங்கையின் வெளியுறவு அமைச்சு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் அத்மிரல் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்ததாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐநா விவகாரத்தில் இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இந்தியா இலங்கையை ஆதரிக்காமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், அவற்றுக்கு ஆதரவளிக்க 18 நாடுகள் தயாராக இருக்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா பேரவையில் ஒரு நாட்டைத் தாக்கி கொண்டுவரப்படும் தீர்மானங்களை கடந்த காலங்களில் இந்தியா நிராகரித்துள்ளதாகவும், இலங்கை விடயத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு அதுவாகவே இருக்கும் என்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தவறான பாதையில் செல்வதாகவும், சரியான கொள்கையில் உள்ள நாடுகள் அதன் தீர்மானங்களை ஆதரிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.