ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட்டினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளரின் இந்த அறிக்கையானது ஐ.நா. சாசனத்தின் 2 (7) வது பிரிவான ‘தற்போதைய சாசனத்தில் உள்ள எதுவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவொரு அரசினதும் உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்காது.’ என்பதனை முழுமையாக மீறும் செயலாகும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேரவை உட்பட ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்துடன் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில், அரசியலமைப்பிற்கு இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் நிலையில், மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான அறிக்கையை நேற்று சமர்பித்தார்.
இதனை தொடர்ந்து ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில், கொழும்பில் இருந்து காணொளி மூலம் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, அந்த அறிக்கையை நிராகரித்து உரையாற்றினார்.
சுயமரியாதை, இறையாண்மை கொண்ட நாட்டிற்கும், முக்கியமாக ஆட்சி தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் ஆணையிட்டுள்ள உயர் ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான விடயமானது, இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது என்றும் இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் இதனை இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்றும் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்திற்கும் மேலதிகமாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவல்கள், தவறான கருத்துக்கள் மற்றும் தன்னிச்சையான மதிப்பீடுகள் குறித்து இலங்கை எழுத்துபூர்வ கருத்துக்களை வழங்கியுள்ளதாகவும்,. உயர் ஸ்தானிகர் அலுவலகம் தனது அறிக்கையை முன்னெப்போதும் இல்லாத பிரச்சாரத்துடன் இணைந்து வெளியிட்டமை மற்றும் குறித்த அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களை ஒரு துணை நிரலாக வெளியிட மறுத்தமை ஆகியன வருத்தமளிக்கின்றது என்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சபைக்கு முன்னர் விளக்கப்பட்ட காரணங்களுக்காக இலங்கையால் நிராகரிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர் குழுவின் மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலக விசாரணை அறிக்கை ஆகியவற்றிலிருந்தான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை மறுக்கின்றது.
அத்துடன் இந்த சபை மற்றும் அனைத்து ஐ.நா. அமைப்புக்களுடனான எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடுகள் இருந்தபோதிலும், வெளிப்புறமாக இயக்கப்படும் சக்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதானது பல சவால்களை ஏற்படுத்துவதாக அமைவதுடன், இதுபோன்ற செயன்முறைகள் ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் உருவாக்கும் என்றும் தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த பேரவையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.